பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி தபால் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-09-22 00:34 GMT


பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி தபால் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பென்ஷன் திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் அரசு ஊழியர் ஒருவர் குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரமாவது ஓய்வூதியமாக பெறுவார், ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் ரூ.1000-க்கும் குறைவாக, அதாவது மாநில அரசுகள் வழங்கும் முதியோர் பென்ஷன் தொகையை விட குறைவாக ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தால் ஊழியரிடம் பிடிக்கப்பட்ட மொத்த தொகையையும் இழக்கும் சந்தை அபாயமும் உள்ளது.

எனவே புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நாடெங்கிலும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றன.

இதன்படி தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

மதுரையில் நடைபெற்ற இந்த கூட்டு ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மதுரை கோட்ட எழுத்தர் பிரிவு தலைவர் உமா மற்றும் தபால்காரர் பிரிவு தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். தேசிய அஞ்சல் ஊழியர் சங்க எழுத்தர் பிரிவு செயலாளர் அசோக்குமார், உதவி தலைவர் செந்தில் ராஜன், தபால்காரர் பிரிவு செயலர் ஆறுமுகம், ஆர்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சங்கங்களை சார்ந்த கணேசன், சகாயராஜ், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தை சார்ந்த திருவரசு மற்றும் அக்ஷயா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தபால்காரர் சுரேஷ், சகாயராஜ் ஆகியோர் நன்றி கூறினர். ஆர்ப்பாட்டத்தில் 32 பெண்கள் உள்பட 110 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்