அஞ்சல் ஊழியர்கள், சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அஞ்சல் ஊழியர்கள், சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தபால் நிலையங்களில் புதிய கணக்கு தொடங்குவதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தபால்காரர் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் சார்பில் மத்திய மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில தலைவர் குமரன் தலைமை தாங்கினார். தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதேபோல் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அரசு கேபிள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்தம் மூலம் பணியமர்த்தும் தமிழக அரசை கண்டித்தும், அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்யக்கோரியும் நடந்த இந்த. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமைதாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெல் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பெல் பயிற்சி மையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க துணை தலைவர் பிரபு தலைமை தாங்கினார். இதில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவ வசதி மற்றும் சமவேலைக்கு சம ஊதியம், மத்திய சட்டக்கூலி வழங்கப்படுவதை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.