மதுவில் விஷம் கலந்து குடித்த தபால் அதிகாரி பரிதாப சாவு

மதுவில் விஷம் கலந்து குடித்த தபால் அதிகாரி பரிதாப சாவு

Update: 2023-08-03 18:45 GMT

சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து மதுவில் விஷம் கலந்து குடித்த தபால் அதிகாரி பரிதாபமாக இறந்தார். மகனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தபால் அதிகாரியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வினோத்(வயது 33). இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக(போஸ்ட் மாஸ்டர்) பணிபுரிந்து வந்தார்.

அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

பரிதாப சாவு

கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார். அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர். மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.

இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார். எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்