மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - காரில் தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மணலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
மணலி அருகே மூலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 56). திருவொற்றியூர் தபால் நிலையத்தில் நிலைய அலுவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மணலி எம்.எப்.எல். சந்திப்பு அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்மநபர்கள் அசோகனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து காரை குறுக்கே நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து வெளியே வந்த 3 நபர்கள் அசோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மீண்டும் காரில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர்.
இதில் வலது கை, வயிற்று பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததால் படுகாயம் அடைந்த அசோகன், ரத்த வெள்ளத்தில் துடி, துடித்தார். இதை பார்த்த பொதுமக்கள் சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து அசோகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அசோகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அசோகனை கொலை செய்ய முயன்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் எதற்காக அவரை கொலை செய்ய முயன்றனர்? எனவும் விசாரித்து வருகின்றனர்.