அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்ப மதிப்பு கூட்டு எந்திரங்கள்
விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்ப மதிப்பு கூட்டு எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப மதிப்பு கூட்டு எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல்" திட்டத்தினை 2020-21-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.41 லட்சம் மானிய ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்பு கூட்டும் எந்திரங்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளன. வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி போன்றவை விவசாயிகளுக்கு 40 சதவீத பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மானிய விலையில் மதிப்பு கூட்டும் எந்திரங்கள் பெற்று பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட, தண்ணீர் பந்தலில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களைhttps://mis.aed.tn.gov.in/login என்ற இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.