முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட்டம்
தூத்துக்குடியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெள்ளச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை இடத்து செயலாளர் பிரான்சிஸ்ஹென்றி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மாரிப்பாண்டி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் சூரியபிரம்மன், மகளிர் பிரிவு செயலாளர் ஆண்டோரத்தினம், திருச்செந்துார் கல்வி மாவட்ட தலைவர் அருள்பெர்னான்டோ ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் திருச்செந்தூரில் விடைத்தாள் திருத்தும் மையம் தொடர்ந்து செயல்படவேண்டும். பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது 8 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீட் பயிற்சி பணிக்கு முதுகலை ஆசிரியர்களை கட்டாய படுத்தக்கூடாது. ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் தூத்துக்குடி கல்வி மாவட்ட தலைவர் சிவா நன்றி கூறினார். இதில் வருவாய் மாவட்ட நிர்வாகிகள், கல்வி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.