நெல்லை டவுனில் அனுமதியின்றி வைத்திருந்தரூ.8.7 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
நெல்லை டவுனில் உரிய அனுமதியின்றி வைத்திருந்த ரூ.8.7 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை டவுனில் உரிய அனுமதியின்றி வைத்திருந்த ரூ.8.7 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வெடிகுண்டு வீச்சு
நெல்லை டவுன் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மீது காரில் வந்த கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து டவுன் போலீசார் சோதனை நடத்தினர். கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடந்தது.
ரூ.8.7 லட்சம் பட்டாசு
இந்த சோதனையில் உரிய அனுமதி இன்றி கடையில் பதுக்கி வைத்து இருந்த சுமார் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்களான தச்சநல்லூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50), பேட்டையை சேர்ந்த அந்தோணி ராஜ் (53), டவுன் பெருமாள் தெற்குரத வீதியை சேர்ந்த ஆனந்தி (31), டவுன் கருப்பன்துறை சாலை தெற்கு ரதவீதியை சேர்ந்த மலையரசி (வயது 70) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.