சவால்கள் நிறைந்த சூழலில் சாதகமான நிதிநிலை அறிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி செவிலியர்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்பு இல்லாததது வருத்தமளிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.;

Update:2024-02-19 23:04 IST

கோப்புப்படம் 

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு தராதது, கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து மாநிலங்களை தவிக்க வைத்துள்ளது, மின்சாரம் உள்ளிட்ட பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாயின. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, மாநில அரசுகளின் வருமானம் குறைந்து - செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் சிறந்த முறையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களின் 5 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பாராட்டத்தக்கது.

அதேபோன்று, குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கண்டறியப்பட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் ஒரு லட்சம் வீடுகளை ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 3 1/2 லட்சம் என்ற வகையில் ஒவ்வொரு வீடுகளையும் கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் மிக சிறப்பு வாய்ந்த திட்டம். தமிழகத்தில் ஏறத்தாழ 50 சதவிகிதம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் நிலையில் புதுமைப்பெண் திட்டமும், காலை உணவுத் திட்டமும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தோழி விடுதிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்பது, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளுக்கு உதவி, உள்ளிட்ட கல்விசார் முன்னெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதோடு, பாலின ஒதுக்கல்களால் பாதிக்கப்படும் பகுதியினருக்கான மேம்பாட்டிற்கும் பெருமளவு உதவும். தொழில் புத்தாக்க மையங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், செயற்கை நுண்ணறிவு கல்வி, திறன்மிகு வகுப்பறை, அனைத்து தொழில் படிப்பு மாணவர்கள் கல்வி கட்டண உதவி ஆகியவை வளர்ந்து வரும் அறிவுசார் இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கக் கூடியது.

தமிழ்மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் புத்தகங்களை மொழி மாற்றம் செய்வதும், அதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகியவை அறிவை பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள், சிறப்பான முன்னெடுப்புகள். பழங்குடியினர் மொழி வளர்ப்பை பாதுகாக்கவும், தமிழ் மொழியை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் சிறப்பு சேர்ப்பவை.

அடையாறு நதி மீட்பு, 5,000 நீர் நிலைகள் புனரமைப்பு, கிராமப்புறச் சாலை மேம்பாடு, சென்னையில் நெருக்கடி மிகுந்த சாலைகள் விரிவாக்கம் என அனைத்தும் எதிர்வரும் காலங்களை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள். பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அடுத்த நான்காண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சமாகும்.

மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர், ஆசிரியரின் மிக முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, சுமார் 100 மாதங்களாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி செவிலியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பு இல்லாததது வருத்தமளிக்கிறது. அரசுத்துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தம் முறை, தொகுதிப்பூதியம் - காலமுறை ஊதியம் முறை, தினக்கூலி முறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆஷா, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது.

சிறுகுறு தொழில் குறித்தான புதிய முன்மொழிவுகள் பல இருந்தபோதும், மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்திருக்க வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சரும், நிதியமைச்சரும் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும்போது இப்பகுதியினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்