பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி நேற்று பொள்ளாச்சி சாலையில் உள்ள சர்வோதய சங்கம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் உண்ணாவிரதம்
பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 32 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே சர்வோதய சங்கம் முன்பு அனுப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டம் தொடரும்
மக்களின் இந்த நியாயமான போராட்டம் வெல்வதற்கு தானும், உறுப்பினர்களும் துணையாக இருப்போம் என அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி பேசுகையில், "தனியார் இரும்பு உருக்கு ஆலையால் தினம் தினம் மக்கள் அடையும் இன்னல்கள் ஏராளம். எனவே இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடும்வரை சங்கத்தின் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.
மேலும் உருக்கு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடும் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், அனுப்பட்டி ஊராட்சி மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
250 பேர் கைது
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை நோக்கி கோஷமிட்டபடி முன்னேறினர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை கைது செய்து அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அனுப்பட்டி ஊர் பொதுமக்கள் 32 நாட்களாக காத்திருப்பு போராட்டம் மற்றும் 9 நாட்களாக நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நேற்று பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.