உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் திரண்டு வந்த விவசாயிகளை ஆர்.டி.ஓ. அலுவலக நுழைவாயிலில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். மேலும் சங்க நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்.டி.ஓ.வை சந்தித்த நிர்வாகிகள் உட்பட அனைவரையும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளத்தையடுத்த மைவாடியில் உரிய அனுமதியில்லாமல் தனியார் எம் சாண்ட் நிறுவனம் செயல்படுகிறது. இதனால் காற்று, நீர் மற்றும் ஒலி மாசு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் மூலம் பி.ஏ.பி. கால்வாயிலிருந்து 5 மீட்டர் தூரத்தில் வணிகப் பயன்பாட்டுக்காக கிணறு வெட்டப்படுகிறது.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண் திருட்டு
உடுமலையையடுத்த பெரிய கோட்டையில் 4.92 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு வீட்டுமனைகளாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சட்ட விரோதமாக கிராம உதவியாளருக்கு 1 ஏக்கர் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர் வேறு ஒருவருக்கு விற்ற நிலையில் தற்போது வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அருகிலுள்ள விவசாயிகளின் பொது வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மைவாடியில் அமராவதி பிரதான கால்வாயை சேதப்படுத்தி கிராவல் மண் திருடப்பட்டுள்ளது.
எனவே மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளபாளையம் பகுதியில் உள்ள அட்டை உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கரித் துகள்களால் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
முறையாக ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.