திருமுருகன்பூண்டியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கொடிகளை அகற்றியதை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரையில் அமர்ந்து போராட்டம்
திருப்பூர் மாநகரில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருமுருகன்பூண்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிகள் போலீஸ் மற்றும் நகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டது.
இதனையறிந்ததும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நேற்று காலை 5 மணி முதல் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு விநாயகர் சிலையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட கொடிகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 பேர் கைது
பின்னர் அந்த இடத்தில் போராட்டதை முடித்துக் கொண்ட அவர்கள், 6-வது வார்டு பகுதியில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டதால், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமையில் போலீசார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இறுதியாக மாநில செயலாளர் செந்தில்குமாரை வேனில் ஏற்றும்போது போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவரை கட்டாயப்படுத்தி வேனில் ஏற்ற முயன்றனர்.
அப்போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்பு போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கோஷம்
முன்னதாக நகராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் பெரிய விநாயகர் சிலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது தமிழக அரசு, நகராட்சி மற்றும் காவல்துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் அதே இடத்தில் விநாயகர் பாடல்களை பாடி, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் பெரிய விநாயகர் சிலையை பொதுமக்கள் வழிபாட்டிற்காக ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு, மற்றொரு சிறிய விநாயகர் சிலையுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.