போடிப்பட்டி
வெண் பட்டுக்கூடு
பயிரை உயிராய் நேசிக்கும் விவசாயிகளுக்கு உயிரையே உயிராய் நேசிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருப்பது பட்டு வளர்ப்புத் தொழிலாகும். மரப் பயிர்கள் சாகுபடி செய்தால் பலனை அனுபவிக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வாழை சாகுபடி செய்தால் பலனை அனுபவிக்க 1 ஆண்டு காத்திருக்க வேண்டும். கரும்பு சாகுபடி செய்தால் பலன் அனுபவிக்க 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும். காய்கறிகள் சாகுபடி செய்தால் அறுவடைக்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் 40 நாட்களில் பலனை அறுவடை செய்ய உதவும் வெண் பட்டு உற்பத்தி விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதமாகும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலவி வரும் சாதகமான பருவநிலை வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் பிடிப்பதற்கு உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த பகுதிகளில் உற்பத்தியாகும் வெண் பட்டுக்கூடுகள் தரத்திலும் சிறந்து விளங்குகின்றன. ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே பட்டு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் நோய் தாக்குதல், போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல விவசாயிகள் இந்த தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுவது ஏன்? வெண்பட்டு உற்பத்தித் தொழிலில் விவசாயிகள் ஈடுபடுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது? என்ற கேள்விகளுக்கு விடை கண்டு, அதற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டால் வெண்பட்டு உற்பத்தியில் மிகப் பெரிய இடத்தை தமிழ்நாட்டு விவசாயிகளால் ஈட்டித்தர முடியும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மகசூல் இழப்பு
ஒரு ஏக்கரில் 5500 மல்பெரி நாற்றுகள் வரை நடவு செய்யலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக கவாத்து செய்து பராமரித்தால் 20 ஆண்டுகள் வரை பலன் பெறலாம். தற்போது பல இடங்களில் வெண் பட்டு உற்பத்திக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்பெரி செடிகளுக்கிடையே ஊடுபயிராக தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது அவர்கள் வெண் பட்டு உற்பத்தியை கைவிடத் தயாராகி விட்டதற்கான அறிகுறியாகவே தோன்றுகிறது. தற்போதைய நிலையில் பருவநிலை மாறுபாடு மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த ரக இளம்புழுக்கள் வழங்கப்படுவதால் ஏற்படும் நோய் தாக்குதல் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.
சுண்ணாம்புக்கட்டி நோய், பால் புழு தாக்குதல் போன்றவற்றால் கடும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.100 முட்டைத் தொகுதிகள் மூலம் புழு வளர்ப்பு மேற்கொண்டால் 80 கிலோ வெண்பட்டுக்கூடுகள் கிடைக்க வேண்டும். ஆனால் 50 கிலோ அளவிலேயே மகசூல் கிடைக்கிறது. இதுபோன்று பருவநிலை மாற்றங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்போது உதவும் வகையில் முழுமையான காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஒரு ஆண்டுக்கு 10 முறை வெண்பட்டு உற்பத்தி செய்யக்கூடிய சூழலில் ஒரு முறை மட்டுமே காப்பீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. அதிலும் போதுமான அளவில் இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே அனைத்து உற்பத்தியிலும் காப்பீடு செய்யும் நடைமுறை கொண்டு வரவேண்டும். இழப்பில் தவிக்கும் பரிதாப விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்கள் மூலம் கைகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை விவசாயம்
மேலும் ரசாயனம் தவிர்த்த இயற்கை முறையில் விவசாயிகள் ஈடுபடும் வகையில் வழிகாட்டல்கள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும்.வெண் பட்டு விற்பனையில் பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக கர்நாடக மாநிலம் ராம்நகர் உள்ளது. ஏனென்றால் அங்கு எப்போதும் வெண் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால் இங்கு அரசு கொள்முதல் மையங்களில் விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ததும் அதற்கான தொகை நிரப்பப்பட்ட ரசீதில், பணம் பெற்றுக் கொண்டேன் என்று விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. ஆனால் சில மாதங்கள் கழித்தே அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
ஒருசில மையங்களில் மட்டுமே துரிதமாக பணம் வரவு வைக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் ஒருசில இடைத்தரகர்களால் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு ராம்நகர் பகுதியில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 100 முட்டைத் தொகுதி கொண்ட இளம்புழு தொகுதி ரூ.2800 லிருந்து ரூ.3100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முட்டைத் தொகுதியின் விலை ரூ.200 ஏற்றப்பட்டதே காரணமாகும். அதனைப் பயன்படுத்தி கூடுதலாக ரூ. 100 விலை ஏற்றப்பட்டுள்ளது.எனவே இனி வரும் காலங்களில் ஒரு விவசாயி கூட வெண் பட்டு உற்பத்தியை கைவிடும் நிலை வரக்கூடாது.மேலும் புதிய விவசாயிகள் ஆர்வமுடன் வெண்பட்டு வளர்ப்பில் ஈடுபட முன் வர வேண்டும்.
அதுபோன்ற ஒரு சாதகமான சூழலை உருவாக்க அரசும் பட்டு வளர்ச்சித்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு என்று விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து ஒரு சில விவசாயிகளின் கருத்து வருமாறு:
செல்வராஜ்(தலைவர், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம்):
பயிர் சாகுபடிக்கு தரமான விதைகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல வெண் பட்டு உற்பத்திக்கு தரமான, வீரியம் மிக்க முட்டைகள் மற்றும் இளம்புழுக்கள் அவசியமாகும். ஆனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட எப்.சி 1, எப்.சி 2 ரகங்களே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை காலப்போக்கில் வீரியம் இழந்து விட்டதாக தோன்றுகிறது. எனவே தரமான இளம்புழுக்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு இளம்புழுக்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு முறையாக விற்பனை ரசீது வழங்கப்படுவதில்லை.வழங்கப்படும் ரசீதில் முட்டைத் தொகுதிக்கு அரசு நிர்ணயித்த விலை மற்றும் கூலி, போக்குவரத்து, இதர செலவினங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக குறிப்பிடப்படுகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.அந்தவகையில் கடந்த காலங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற ஐயப்பாடு குறித்து சங்கத்தின் மூலம் புகார் தெரிவித்துள்ளோம்.எனவே விவசாயிகளுக்கு தெளிவான ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமிநாதன்(பட்டு விவசாயி, சின்ன வீரன்பட்டி):
கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அனைத்து தொழில்களிலும் எந்திர மயமாக்கல் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது.வெண் பட்டு உற்பத்திக்கு தேவையான எந்திரங்கள் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அது வரவேற்புக்குரிய விஷயமாகும்.அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தைப் போல விவசாயிகள் விரும்பும் நிறுவனங்களின் எந்திரங்களை வாங்கிக் கொள்ளவும், அதற்கான நிதியை பின்னேற்பு மானியமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்மூலம் விவசாயிகள் தரமான எந்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இளங்கோ(விவசாயி, உடுமலை):
ஆட்கள் பற்றாக்குறையால் மல்பெரி பராமரிப்பு சிக்கலாக உள்ளது.எனவே மற்ற விவசாயத்துக்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைப் பயன்படுத்துவது போல வெண்பட்டு உற்பத்தியிலும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.மேலும் கடந்த காலங்களில் கர்நாடகாவில் பட்டுக்கூடுகளுக்கு கிலோவுக்கு ரூ. 25 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.அதுபோல தமிழ்நாட்டிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெண் பட்டுக்கூடுகளுக்கு சீரான விலை கிடைப்பதற்கு அரசு உதவ வேண்டும்.
-------------
பாக்ஸ் செய்தி
புவிசார் குறியீடு கிடைக்குமா?
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் கலைத்தட்டு, மதுரை மல்லிகைப்பூ, சுங்கிடி சேலை, பத்தமடை பாய் போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.அந்தவகையில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக, குறிப்பாக உடுமலை பொள்ளாச்சி பகுதிகளில் சிறப்பாக உள்ள வெண்பட்டுக்கூடுகளுக்கு புவிசார் குறியீயீடு வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் சிறப்பிடம் பெற்றதன் மூலம், அந்த பகுதியின் அடையாளமாக விளங்கும் பொருட்களுக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து பகுதிகளிலும் வெண்பட்டு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தரமற்ற விதைக்கூடு உற்பத்தியா?
புழு உற்பத்திக்கான விதைக்கூடு வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.இந்த விதைக்கூடு உற்பத்திக்கு 140 நாட்கள் பிடிக்கும். இந்தநிலையில் குறைந்த நாட்களில் விதைக்கூடு உற்பத்தி செய்வதற்கு அமில நேர்த்தி என்னும் முறையை கடைபிடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் புழுக்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
-