பூம்புகார் மீன்பிடி துறைமுக இணைப்பு சாலை பணிகள் தொடங்கப்படவில்லை

ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பூம்புகார் மீன்பிடி துறைமுகம் செல்லும் இணைப்பு சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2023-07-31 18:45 GMT

திருவெண்காடு:

ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பூம்புகார் மீன்பிடி துறைமுகம் செல்லும் இணைப்பு சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி துறைமுகம்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் மீனவர்களின் நலன் கருதி ரூ.150 கோடியில் கடந்த 2015-ம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த துறைமுகம் பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதி மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்திட ஏதுவாக இருந்து வருகிறது. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களின் விசைப்படகுகள், பைபர் படகுகள் ஆகியவை இந்த துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் இந்த துறைமுகம் வசதியாக உள்ளது.

பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்ட நிலையிலும், இந்த துறைமுகத்திற்கான அணுகு சாலை இல்லாமல் மீனவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் சாலையை புதிதாக அமைத்திட உத்தரவிட்டது.

அரசுக்கு பரிந்துரை

இந்த நிலையில் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் இணைப்பு சாலை ஊராட்சி சாலையாக இருந்ததால், சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை அறிந்த காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மேற்கண்ட சாலையை சீரமைத்திட ஏதுவாக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பதாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனை ஏற்று சீர்காழி ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மேற்கண்ட சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை, பூம்புகார் துறைமுக சாலையை நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைக்க அரசுக்கு பரிந்துரைத்தனர்.

ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த பரிந்துரையின் பெயரில் தமிழக முதல்-அமைச்சர் ரூ.1.10 கோடி செலவில் புதிய தார் சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இந்த சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் டெண்டர் விடப்பட்டதாகவும், ஆனால் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி துறைமுகத்திற்கு செல்ல ஏதுவாக சாலை அமைத்து தர வேண்டி தமிழக முதல்-அமைச்சரிடம் நேரில் மனு அளித்தோம். அதனை ஏற்று சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த சாலையை நாள் தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் மீன் பிடிக்க செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் இந்த சாலையின் வழியாக செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலை அமைக்கும் பணியை தொடங்கிட வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்