விழுப்புரத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பூமாலை வணிக வளாகம்:கைவினைப்பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மகளிர் சுய உதவிக்குழுவினர் தவிப்பு
விழுப்புரத்தில் பூமாலை வணிக வளாகம் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் கைவினைப்பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மகளிர் சுய உதவிக்குழுவினர் தவித்து வருகின்றனர்.
பூமாலை வணிக வளாகம்
பூமாலை வணிக வளாகம் என்பது கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த கைவினை கலைப்பொருட்கள் விற்கும் இடமாகும். பனை ஓலையில் செய்யப்பட்ட பலவித பொருட்கள் இங்கு கிடைக்கும். இதுதவிர கண்ணாடி ஓவியங்கள், பொம்மைகள், பூத்தையல் செய்யப்பட்ட உடைகள், பரிசுப்பொருட்கள், மூலிகைப்பொருட்கள் மற்றும் இதர சமையலறைப்பொருட்கள் ஏராளம் இந்த வணிக வளாகத்தில் கிடைக்கும்.
ஒரு கூட்டுறவு அமைப்பாக இயங்கும் இந்த வளாகம் ஏராளமான கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமாக செயல்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்
விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே பூமாலை வணிக வளாகம் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்காக இந்த வணிக வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு குழுக்கள் வீதம் 20 குழுக்களுக்கு இங்குள்ள வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன. இதுதவிர இந்த வணிக வளாக தரைத்தளத்தில் காதி கிராப்டும் செயல்பட்டு வந்தது.
மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்யும் துணிப்பைகள், கண்ணாடி ஓவியங்கள், பொம்மைகள், பூத்தையல் செய்யப்பட்ட உடைகள், பரிசுப்பொருட்கள், மூலிகைப்பொருட்கள், சமையலறைப்பொருட்கள், சோப்பு, ஷாம்பூ,, திண்பண்டங்கள், இயற்கை உரங்கள் உள்ளிட்ட பலவற்றை இங்குள்ள வணிக வளாகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதன் வளாகத்தில் மலிவு விலை உணவகமும் இயங்கியது. இங்கு தினமும் 3 வேளையும் மலிவு விலையில் வழங்கப்படும் உணவை ஏழை, எளிய மக்கள் வயிறாற சாப்பிட உதவியாக இருந்தது.
பராமரிப்பின்றி
இந்த பூமாலை வணிக வளாகத்தில் குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கப்பட்டதால், மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்களையும் குறைந்த விலைக்கே மக்களிடம் விற்பனை செய்து வந்தனர். இந்த வணிக வளாகம் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் மூலம் இங்கு கடைகள் நடத்தி வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்விலும் ஒளியேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வணிக வளாகம் முறையாக பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்த நிலைக்கு தள்ளப்பட்டது. வணிக வளாக தரைத்தளம் ஆங்காங்கே பெயர்ந்து போனது. சில கடைகளின் கட்டிட மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு கடைக்குள் இருக்கும் பொருட்கள் வீணாகின. அதுமட்டுமின்றி கட்டிட சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு மிகவும் பாழடைந்த நிலையில் வணிக வளாகம் காட்சியளித்தது. இதனால் இங்கு கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்ய வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
காலி செய்யப்பட்ட கடைகள்
இதையடுத்து இந்த வணிக வளாகத்தை புதுப்பித்து சீரமைக்க மகளிர் திட்டத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவ்வளாகத்தில் கடை நடத்தி வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரிடம், கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதன்பேரில் அவர்கள் கடைகளை காலிசெய்து கொடுத்தனர். ஆனால் அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு தற்காலிகமாக கடைகள் வைத்து நடத்த மாற்று இடம் ஏதும் வழங்க ஏற்பாடு செய்யவில்லை. பூமாலை வணிக வளாகத்தை விரைந்து சீரமைக்கவும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக மகளிர் சுய உதவிக்குழுவினர், தாங்கள் உற்பத்தி செய்த கைவினைப்பொருட்களை அவரவர் வீட்டிலேயே வைத்து விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே தயாரித்த கைவினைப்பொருட்களையும் விற்பனை செய்ய முடியாத நிலையில் புதியதாக கைவினைப் பொருட்களை தயாரிக்க முடியாமலும் அவர்கள் தற்போது மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூட்டியே கிடக்கிறது
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களின்போது இவ்வணிக வளாகத்தில் கைவினைப்பொருட்கள் சிறப்பு விற்பனை கண்காட்சி நடத்தப்படும். ஆனால் வணிக வளாகம் கடந்த 6 மாதங்களாக பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் இந்த ஆண்டு சிறப்பு கண்காட்சிகளும் நடத்த எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுவினரின் வீடுகளிலும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆகாமல் இருக்கிறது. இதைப்பார்த்து அவர்கள் தினம், தினம் மிகுந்த கவலையடைந்து வருகின்றனர். கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக ஏற்கனவே வங்கிகளில் வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். வங்கி கடனை அடைப்பதற்கான எளிய வழிமுறைகளையும் அதிகாரிகள் செய்யவில்லை என மகளிர் சுய உதவிக்குழுவினர் புலம்புகின்றனர்.
சமூகவிரோதிகளின் கூடாரமாக
தற்போதைய தி.மு.க. அரசு, மகளிர் சுய உதவிக்குழுவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பல உதவிகளை செய்து வருகிறது. ஆனால் விழுப்புரம் பூமாலை வணிக வளாகம் கடந்த 6 மாதங்களாக பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் அதனையே நம்பியிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் சுமார் 200 பேரின் குடும்பங்களில் ஒளிவீசாமல் இருளில் தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த வணிக வளாகம் பயன்பாடின்றி இருப்பதால் தற்போது அது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. அவ்வணிக வளாகத்தை சமூகவிரோதிகள் பலர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவு நேரங்களில் அங்கு சென்று மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வளாகத்தில் பல இடங்களில் காலி மதுபாட்டில்களும், சிகரெட் பாக்கெட்டுகளும், தண்ணீர் பாக்கெட்டுகளும் கிடக்கிறது.
கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
எனவே மகளிர் சுய உதவிக்குழுவினரின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்வில் வளம்பெற ஏதுவாக தற்போது பயன்பாடின்றி இருந்து வரும் பூமாலை வணிக வளாகத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?