சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,400-க்கு ஏலம்; ஒரே நாளில் ரூ.2,380 குறைந்தது
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,400-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 380 குறைந்தது.
சத்தியமங்கலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,400-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 380 குறைந்தது.
பூக்கள் ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,400-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.180-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.360-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.
இதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.3 ஆயிரத்து 780-க்கும், முல்லை ரூ.660-க்கும், காக்கடா ரூ.725-க்கும், செண்டுமல்லி ரூ.140-க்கும், பட்டுப்பூ ரூ.70-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.
விலை குறைந்தது
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 380 குறைந்துள்ளது. அதேபோல் முல்லை ரூ.300-ம், காக்கடா ரூ.325-ம், கனகாம்பரம் ரூ.40-ம், செவ்வந்தி ரூ.40-ம் குறைந்திருந்தது. மேலும் செண்டுமல்லி ரூ.40-ம், பட்டுப்பூ ரூ.30-ம், ஜாதிமல்லி ரூ.100-ம், சம்பங்கி, அரளி ரூ.40-ம் விலை உயர்ந்திருந்தது.
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'ஓணம் பண்டிகை என்பதால் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) பூக்கள் விலை அதிகமாக உயர்ந்திருந்தது. பண்டிகை இன்று (அதாவது நேற்று) முடிந்ததால் பூக்கள் விலை குறைந்துவிட்டது' என்றனர்.