பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர்.

Update: 2023-01-04 00:19 GMT

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1,000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை வருகிற 9-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தற்போது ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்துதான் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெறவும் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கும் முறையும் நடைமுறையில் இருந்து வருகிறது.

டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

அதாவது அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள மொத்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக் கையின் படி ஒரு நாளைக்கு 200 முதல் 250 பேர் வரை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் முன்கூட்டியே டோக்கன் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கினார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது. டோக்கன் முறைப்படி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்கள் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ளலாம். டோக்கன் வழங்கும் பணியானது வருகிற 8-ந்தேதி வரை நடைபெறும்.

அதன்பின்னர் 9-ந்தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்