தப்புக்குண்டு லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பொங்கல் விழா

தப்புக்குண்டுவில் உள்ள லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-03-11 20:30 GMT

தேனி அருகே தப்புக்குண்டுவில் லட்சுமி நரசிங்கப்பெருமாள், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா நேற்று தொடங்கியது. வருகிற 15-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது.

இந்தநிலையில் நேற்று லட்சுமி நரசிங்கப்பெருமாள் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு சேஷவிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தப்புக்குண்டு, தாடிச்சேரி, காட்டுநாயக்கன்பட்டி, மல்லையகவுண்டன்பட்டி, சவளப்பட்டி ஆகிய 5 கிராமங்களின் சார்பில் தலா ஒரு காளை அழைத்து வரப்பட்டது. அந்த காளைகள் கோவில் எல்லையில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை பின்தொடர்ந்து மக்கள் ஓடினர். காளையை பிடித்துக்கொண்டு முதலில் கோவில் எல்லைக்கு வரும் நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காளையை முதலில் பிடித்து வந்தவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், மக்கள் அனைவருக்கும் கரும்பு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நாளை (திங்கட்கிழமை) பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பல்லையம் பிரித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 15-ந்தேதி மாவிளக்கு எடுத்தல், காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், மஞ்சள் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்