நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சமத்துவ பொங்கல் விழா நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வேலூர் ரோடு கரட்டுப்பாளையம் பகுதியில் கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு ஒன்றிய திமு.க. செயலாளர் வட்டூர் தங்கவேல் வரவேற்றார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு தொகுதி ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். விழாவையொட்டி அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பெண்களுக்கு பொங்கல் பாத்திரங்கள், சேலைகள், கரும்பு உள்ளிட்டவைகளை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எலச்சிப்பாளையம்
திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகளும், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அகரம் கிராமம் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் சமத்துவ பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அகரம் ஊராட்சி மன்ற தலைவர் லதா லட்சுமணகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ். ஊராட்சிமன்ற துணை தலைவர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் சிலைக்கு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மாலை அணிவித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் அனைவருக்கும் பொங்கல் வழங்கி விளையாட்டு போட்டிகளை. தொடங்கி வைத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், சப-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூய்மை பணியாளர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
பழங்குடியின மக்கள்
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பெரிய கோம்பை புதூர் பகுதியில் வசிக்கும் கொல்லிமலை பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
பொங்கல் விழாவையொட்டி வீடுகளில் வண்ண கோலமிட்டு மஞ்சள், கரும்பு தோரணங்கள் கட்டியிருந்தனர். பெண்கள் புத்தாடை அணிந்தும், புதுப்பானையில் பொங்கல் வைத்தும் சிறப்பு பூஜைகள் செய்து சூரியனை வழிபட்டனர். மேலும் பெண்கள் நடனமாடி பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
பள்ளிப்பாளையம்
பள்ளிபாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தெற்கு ஒன்றிய குழு சார்பில், காவேரி ஆர்.எஸ்., வசந்த நகர் ஆகிய 2 கிளைகளில், மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா மற்றும் விளையாட்டு் போட்டிகள் நடைபெற்றது. காவேரி ஆர்.எஸ். பகுதியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு போட்டிக்கு கிளை தலைவர் எஸ்.பூபாலன் தலைமை தாங்கினார்.
சிறுவர், சிறுமியர் ஓட்டப்பந்தயம், சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் ஊதி உடைத்தல், ஸ்லோ சைக்கிள், வாழைப்பழம் கடித்தல், சட்டி உடைத்தல், லக்கி கார்னர், மியூசிக் சேர் உள்ளிட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட குழு உறுப்பினர் கவுசல்யா, கிளை தலைவர் அரவிந்தன், செயலாளர்கள் சதீஷ்குமார், ரவின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.