அனுப்பர்பாளையம்,
திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய புதிய கட்டிடம் கடந்த 30-ந்தேதி ராக்கியாபாளையத்தில் திறக்கப்பட்டது. இதையடுத்து பழைய கட்டிடத்தில் இருந்து புதிய போலீஸ் நிலைய கட்டிடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொங்கல் விழா திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது. அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமையில், திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. . ஆண், பெண் போலீசார் மற்றும் போலீசாரின் குழந்தைகள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை மற்றும் சேலையணிந்து வந்திருந்தனர். பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில் பானை உடைத்தல், லெமன் ஸ்பூன், இசை நாற்காலி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்களும் போட்டிகளில் கலந்து கொண்டனர். பானை உடைத்தல் போட்டியில் தலைமை காவலர் மனோகரன் பானையை உடைத்து வெற்றி பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.