மது தகராறில் பாலிடெக்னிக் மாணவர் ெகாலை?

மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்த பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார். சக நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.;

Update:2023-06-07 01:19 IST

ஸ்ரீவில்லிபுத்தூர், 

மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்த பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார். சக நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரத்த காயத்துடன் மாணவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிவராமகணேஷ் (வயது 16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சிவராம கணேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன் நண்பர்களுடன் வெளியே சென்றார். வீட்டிற்கு இரவில் வந்தார். அப்போது அவர் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

பின்னர் சற்று நேரத்தில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. பேச்சுமூச்சின்றி கிடந்தார்.

உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிவராம கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சிவராம கணேசின் நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறும்போது, "மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் 16 வயதுடைய நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் அடித்ததால் சிவராமகணேசுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில்தான் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்