அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி; நண்பர் படுகாயம்

மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-08 19:16 GMT

மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

பஸ் மோதியது

மதுரை பைகாரா முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் காசிமாயன். இவருடைய மகன் விக்ரம் என்ற ராம் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் அக்னிராஜ் (18). நண்பர்களான இவர்கள் இருவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.

நேற்று மதியம் இருவரும் மோட்டார் சைக்கிளில் எல்லீஸ் நகர் 70 அடி மெயின் ரோட்டில் இருந்து பை-பாஸ் ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

மாணவர் பலி-நண்பர் படுகாயம்

இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்ரம் பலியானார். அக்னிராஜ் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். படுகாயம் அடைந்த அக்னிராஜை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பலியான விக்ரமின் உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற விக்ரம் தலைக்கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பஸ் சக்கரம் அவரது வயிறு பகுதியில் ஏறி இறங்கியதாக போலீசார் தெரிவித்தனர், இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்