வாக்குச்சாவடிகள் மறு வரைவு பட்டியல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் மறுவரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

Update: 2022-09-09 17:18 GMT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் மறுவரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாக்குச்சாவடிகள் மறுவரையறை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, தனி வட்டாட்சியா் ரமேஷ் மற்றும் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, அ.தி.மு.க. சார்பில் தேவதாஸ், ரமேஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் முனியாண்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பெரோஷ்காந்தி, பா.ஜ.க. சார்பில் சுப்புகாளை, ராமதாஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வீரக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சகாயம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வாக்குச்சாவடிகள்

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடிகளும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 334 வாக்குச்சாவடிகளும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 351 வாக்குச்சாவடிகளும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சிவகங்கை தொகுதியில் கட்டாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலிருந்த வாக்குச்சாவடி கட்டாணிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், மேலச்சாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டிடங்கள் இடமாற்றம் செய்தல், வி.புதுக்குளம் அங்கன்வாடி மைய கட்டிடத்திலிருந்து வி.புதுக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்தல். மானாமதுரை (தனி) தொகுதியில் மானாமதுரை பேரூராட்சி அலுவலக கட்டிடத்திலிருந்து மானாமதுரை நகராட்சி அலுவலக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்தல், மானாமதுரை பேரூராட்சி அலுவலக புதிய கட்டிடத்திலிருந்து மானாமதுரை நகராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகிய 2 வாக்குச்சாவடிகளை மானாமதுரை வட்டத்தில் பெயர் மாற்றம் செய்தல்.

மறுவரைவு பட்டியல்

அதேபோன்று, இளையான்குடி வட்டத்தில் புதுக்கோட்டை விஜயதாஸ் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் உள்ள பாகம் 303-லிருந்து பகுதி-1, பகுதி-2 ஆகியவைகளை பாகம் 304-க்கு மாற்றம் செய்தல், பஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பாகம் 304-லிருந்து பகுதி-1, பகுதி-2 ஆகியவைகளை பாகம் 303-க்கு மாற்றம் செய்தல் என இளையான்குடி வட்டத்தில் 2 வாக்குச்சாவடிகளிலிருந்து 4 வாக்குப்பதிவு பகுதிகளை இடம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட அதை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் பெற்று கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்