வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கெடுப்பு தீவிரம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும், வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறினார்.

Update: 2023-06-07 20:45 GMT

சென்னை,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விடும்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

அதாவது மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 135 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்படும்.

அதாவது ஒரு தொகுதியில் 200 வாக்குப்பதிவு மையங்கள் இருக்கிறது என்றால் 270 வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்போம். வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியும் தொடங்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கேற்ப கூடுதலாக எத்தனை வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்றும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஜூலை மாதத்துக்குள் நிறைவு பெறும்.

ஆய்வு செய்யப்படும்

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கூடுதலாக தேவைப்படும், பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மாற்று எந்திரங்கள் வழங்குவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும்.

ஆகஸ்டு மாத இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்