கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் 'சீமானை எதிர்க்க காங்கிரஸ் தயார்' - கே.எஸ்.அழகிரி பேட்டி

சீமானை கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் எதிர்க்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-03 09:13 GMT

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினம் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மூவரின் உருவப்படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி எஸ்.பாஸ்கர், பி.வி.தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர்கள் அகரம் கோபி, ஜி.தமிழ்செல்வன், இலக்கிய அணி மாநிலத்தலைவர் பி.எஸ்.புத்தன் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்டும், காவிரி ஆணையமும் தெளிவாக கூறியிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த ராஜ தந்திரத்தோடு செயல்படுகிறார். வாய்ப் பேச்சால் பலன் இல்லை நமக்கு வேண்டியது தண்ணீர் தான் என்ற முறையில் தெளிவான முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் பா.ஜ.க. மட்டும் நாடகம் ஆடுகிறது. கர்நாடகாவில் போராட்டத்திற்கு காரணமே பா.ஜ.க.தான். அவர்களின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை.

கச்சத்தீவை பற்றி சீமான் பேசுகிறார். கச்சத்தீவை அவர் மீட்டு வருவதை யார் வேண்டாம் என்றார்கள். இந்திய அரசாங்கம் சட்டப்பிரகாரம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது. இது ஒரு ராஜதந்திர நடவடிக்கை.

உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்த போதும், ராஜீவ் காந்தி தான் யாழ்ப்பாணத்திற்கு இந்திய விமானத்தை எடுத்து சென்று இலங்கை அரசின் அனுமதியின்றி யாழ்ப்பாண தமிழர்களுக்காக உணவு பொட்டலங்களை வழங்கினார். இப்போது அங்குள்ள நிலைமை என்ன? எனவே, காங்கிரசுக்கு எதிராக சீமான் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சீமான் இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசி வருகிறார். மாநிலங்களுக்கு இடையே இன கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அதெல்லாம் நல்ல அரசியல் கிடையாது. இனப்பிரச்சினையை உருவாக்கி கலவரத்திற்கு தூண்டுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சீமானை எதிர்த்து பேசினால்தான் நான் (கே.எஸ்.அழகிரி) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தொடர முடியும் என்கிறார். தலைவர்கள் ராகுல்காந்திக்கோ, மல்லிகார்ஜுன கார்கேவுக்கோ சீமானை தெரியாது. அவர்கள் சீமானை எதிர்த்து பேசுமாறு கூறவும் இல்லை. சீமானுக்கு காங்கிரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நாங்களும் சீமானை கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் எதிர்க்க தயார். எல்லா பிரச்சினைகளையும் அவருடன் விவாதிக்க நாங்கள் தயார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்