பிறந்த நாள் விழாவையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
சேலத்தில் பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம்,
பெரியார் பிறந்த நாள் விழா
பெரியாரின் பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியில் கட்சியினர் மற்றும் திராவிடர் கழகம் போன்ற பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் பொன்முடி சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க நிர்வாகிகள் அதை ஏற்றுக்கொண்டனர்.
முற்றிலும் தவறு
நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
பெரியாரை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். அவரது சிலையை அவமரியாதை செய்கின்றனர். பெரியார் கடவுள் மறுப்பாளர். அது ஏனென்றால் சாதி, மத பாகுபாடு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதால் எதிர்த்தார். அவரே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார்.
அதை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்துக்கள் குறித்து ஆ.ராசா தவறாக பேசியதாக கூறுவது முற்றிலும் தவறு. திராவிட மாடல் என்பது இந்துக்களை வெறுப்பது அல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஆண், பெண் என அனைவரும் சமம் என்பதாகும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., பா.ம.க.
அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் மற்றும் அமைப்பு செயலாளர் செம்மலை ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில பசுமை தாயக துணை பொதுச்செயலாளர் சத்திரியசேகர், மாவட்ட துணை செயலாளர் சுமன் உள்பட பலர் கலந்து கொண்டார்.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்
ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர பொருளாளர் காஜாமொய்தீன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மண்டல செயலாளர் நாவரசன் உள்பட பலர் கொண்டனர்.
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் டேவிட் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் பெரியாரின் படத்தை முகமூடியாக அணிந்திருந்தனர்.
சேலம் தமிழ் சங்கத்தின் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைவர் சீனி.துரைசாமி, செயலாளர் வரத.ஜெயக்குமார், பொருளாளர் எஸ்.டி.சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.