காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரர் - ஆயுதப்படைக்கு மாற்றம்
காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.;
சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே இரவு நேரத்தில் வளசரவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் காரில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்பட 2 போலீஸ்காரர்கள், காரில் இருந்த காதல் ஜோடியிடம் விசாரித்தனர். போலீசாரிடம் அவர்கள், "நாங்கள் இருவரும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்" என்றனர்.
இதையடுத்து இருவரது பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கிய போலீசார், இரவு நேரத்தில் இங்கு நிற்க கூடாது என இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் போலீஸ்காரர் கிருஷ்ணகுமார், நள்ளிரவில் அந்த கல்லூரி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்தார். இதனால் அந்த மாணவி, தனது காதலனிடம் தெரிவித்தார். அவர் போலீஸ்காரரை தொடர்பு கொண்டு இதுபற்றி தட்டிக்கேட்டார்.
அப்போது போலீஸ்காரர் கிருஷ்ணகுமார், காதல் ஜோடி இருவருக்கும் 'வாட்ஸ் அப்'பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பியும், செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டல் தொனியில் பேசியதுடன், கல்லூரி மாணவி குறித்து தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸ்காரர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதல் ஜோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு மீது விசாரிக்கும்படி மதுரவாயல் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் துணை கமிஷனர் குமார் விசாரணை மேற்கொண்டதில் காதல் ஜோடியிடம் போலீஸ்காரர் மிரட்டும் தொனியில் பேசியது உறுதியானது. இதையடுத்து போலீஸ்காரர் கிருஷ்ணகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் போலீஸ்காரர் கிருஷ்ணகுமார், கல்லூரி மாணவியை தரக்குறைவாகவும், மிரட்டும் தொனியிலும் பேசும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.