பணியின்போது போலீஸ்காரர் திடீர் சாவு

உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-29 20:00 GMT

சின்னமனூரை சேர்ந்தவர் அபுகனி (வயது 44). கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணி செய்வதற்காக வந்தார். அங்கு சக போலீஸ்காரர்களுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் நள்ளிரவில் அவர் மயக்கம் வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து கடுமையாக நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து சக போலீஸ்காரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அபுகனியின் உடலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சின்னமனூரில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் அங்குள்ள பள்ளிவாசலில் 21 குண்டு முழங்க போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த அபுகனிக்கு, மனைவி, ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்