போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

பாபநாசம் தலையணையில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-01 19:59 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் தலையணையில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கேசவன் (வயது 38). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை விட்டு தனியாக வசித்து வந்தார். மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற முயன்றதாகவும், இதனால் கேசவன் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஷம் குடித்து சாவு

இந்த நிலையில் கேசவன் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மருதூருக்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று மாலை பாபநாசம் தலையணைக்கு சென்றார். அங்கு தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் விஷம் குடித்து விட்டு தலையணையில் குளித்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் சென்று, கேசவன் உடலை மீட்டனர்.

போலீசார் விசாரணை

மேலும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சென்று, கேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்