கும்மிடிப்பூண்டியில் இருந்து கடத்தி சென்று வாலிபரை கொன்று உடலை கண்மாயில் வீசிய போலீஸ்காரர்
கும்மிடிப்பூண்டியில் இருந்து தனியார் நிறுவன ஊழியரை கடத்தி வந்து, அவரை கொன்று உடலை சாக்கு மூடையில் கட்டி கண்மாயில் வீசிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் சிக்கினர்.
ராஜபாளையம்,
மதுரை சி.எம்.ஆர். சாலையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 28-ந் தேதி தான் தங்கியிருந்த அறையில் இருந்து வேலைக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து மாரிமுத்துவின் தந்தை துரைப்பாண்டி அளித்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை தேடி வந்தனர்.
பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மணிமுத்தாறு போலீஸ்காரர்
விசாரணையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்த வில்வதுரை என்பவருக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வில்வதுரை தன்னுடைய நண்பர்களான இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து மாரிமுத்துவை கடத்தி சென்று, கொலை செய்தது தெரியவந்தது.
அதாவது, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓடையில் வைத்து மாரிமுத்துவை 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை சாக்குமூடையில் கட்டி காரில் கொண்டு வந்துள்ளனர்.
கண்மாயில் வீச்சு
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் புனல்வேலி கண்மாயில் கல்லைக்கட்டி மாரிமுத்துவின் உடல் இருந்த மூடையை வீசிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வில்வதுரை, இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் கண்மாய்க்குள் இறங்கி தேடியபோது அந்த மூடை சிக்கியது.
அதில் இருந்து மாரிமுத்துவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பிடிபட்ட போலீஸ்காரர் உள்பட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.