10 கல்லூரிகளில் போலீஸ் எழுத்து தேர்வு 11,867 பேர் எழுதுகிறார்கள்
குமரி மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் வருகிற 27-ந் தேதி போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதை 11,867 பேர் எழுதுகிறார்கள்.;
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் வருகிற 27-ந் தேதி போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதை 11,867 பேர் எழுதுகிறார்கள்.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலீஸ் எழுத்து தேர்வு
நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12.40 மணி வரை குமரி மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் நடைபெற உள்ளது.
அந்த கல்லூரிகளில் போலீஸ் எழுத்து தேர்வை 11,867 பேர் எழுதுகிறார்கள்.
10 மணி வரை அனுமதி
இந்த தேர்வினை நடத்துவதற்காக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் துணைக்குழு தலைவராக நியமித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் 27-ந் தேதி அன்று காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.
செல்போனுக்கு தடை
விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையினை கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தேர்வு எழுதும் அறைக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. எழுத்து தேர்வுக்கு வரும்போது கறுப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வரக் கூடாது.
அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tn.gov.in/tnusrb.com) இருந்து அழைப்புக் கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அதில் "ஏ" அல்லது "பி" பிரிவு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.04652 220167 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.