கொள்ளை போன நகை, பணத்தை மீட்க முடியவில்லை என போலீசார் கைவிரிப்பு-பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க பரிசீலனை-உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கொள்ளை போன நகைகளை மீட்க முடியவில்லை என்று வழக்கை போலீசார் முடித்து வைத்தது ஏற்புடையதல்ல என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க பரிசீலிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-09 20:51 GMT


கொள்ளை போன நகைகளை மீட்க முடியவில்லை என்று வழக்கை போலீசார் முடித்து வைத்தது ஏற்புடையதல்ல என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க பரிசீலிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெண்ணின் வீட்டில் கொள்ளை

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தங்கம் என்ற பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிங்கம்புணரி அரசு பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பள்ளியில் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன். அப்போது என் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள், ரூ.1 லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எனது நகைகள் கொள்ளை போனது தொடர்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் என் நகைகள் மீட்கப்படவில்லை. இதனால் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன்.

இழப்பீடு தாருங்கள்

அந்த வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகளை கண்டுபிடித்து, நகைகளை மீட்க முடியவில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது ஏற்புடையதல்ல.

இத்தனை ஆண்டுகாலமாக விசாரிக்கிறோம் என்ற போர்வையில் போலீசார் காலம் கடத்தியது சட்டவிரோத நடவடிக்கை. இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரருக்கு சொந்தமான நகைகளை மீட்க முடியவில்லை என்று கூறி, அந்த வழக்கை போலீசார் முடித்து வைத்தது ஏற்புடையதல்ல. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது சம்பந்தமான மனுவை உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்