கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரம்:விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரத்தில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Update: 2023-05-15 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலியானார்கள். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவல்துறைக்கு எச்சரிக்கை

காவல்துறையும், அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும், கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த பிரச்சினையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலும் ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்துவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏ.டிஜி.பி. சங்கர், டேவிட்சன் தேவாசிர்வாதம், கலெக்டர்கள் விழுப்புரம் பழனி, செங்கல்பட்டு ராகுல்நாத், வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி மோகன் ராஜ், கடலூர் ராஜாராம், துரைரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்