போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவருடைய மனைவி விஜயலெட்சுமி. இவர்களது மகன்கள் கற்பகவிநாயகம் (வயது 27), விக்னேஷ் (24).
இதில் இளைய மகன் விக்னேஷ் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கற்பகவிநாயகம் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
கடந்த 19-ந் தேதி இரவில் கற்பகவிநாயகம் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூங்க சென்றார். நேற்று முன்தினம் இரவு வரை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கற்பகவிநாயகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கற்பக விநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.