சோமங்கலம் அருகே போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
சோமங்கலம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் நகை, பணம் திருடி விட்டு தப்பி சென்றார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் எலன் (வயது 25). இவர் எறுமையூர் நேடுஞ்சாலையோரம் காரை நிறுத்தி விட்டு தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்தார். உடனே எலன் மற்றும் அவரின் நண்பரிடம் எதற்காக இங்கே காரை நிறுத்தி இருக்கிறீர்கள்? என அதிகார தோரணையில் பேசினார். இதனால் இருவரும் பதட்டம் அடைந்தனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த நபர் தான் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எனவும், தற்போது ரோந்து வந்ததாகவும் கூறினார். மேலும் உங்கள் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி எலன் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.1000 ஆகியவற்றை வாங்கி கொண்டு சோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் என கூறி விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மறைந்தார்.
இருவரும் சோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு சென்று போலீசாரிடம் விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி இளம்பெண்ணிடம் நூதன முறையில் திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருடர்கள் பல விதங்களில் தங்களின் அடையாளத்தை மாற்றி திருடி வரும் நிலையில் தற்போது 'டிரென்டிங்'காக போலீஸ் என கூறி பெண்ணிடம் திருடியிருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.