போலீஸ் நிலையம் முற்றுகை: 8 பங்குதந்தைகள் உள்பட 520 பேர் மீது வழக்கு

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 8 பங்கு தந்தைகள் உள்பட 520 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-11-18 18:45 GMT

நாகர்கோவில்,

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 8 பங்கு தந்தைகள் உள்பட 520 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முள்வேலி விவகாரம்

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் புனித யூதா கல்லூரியின் பின்புறத்தில் 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் நாகர்கோவிலை சேர்ந்த அகமது ரகீம் என்பவருக்கு சொந்தமானது. அந்த நிலத்திற்கு கல்லூரி நிர்வாகமும் உரிமைகோரி வந்த நிலையில் வருவாய் துறையினர் அகமது ரகீமுக்கு உரிமை உள்ளது என்று அதற்கான சான்றிதழை வழங்கி உள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் நித்திரவிளை போலீசாரின் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தார்.

இதனை தூத்தூர் மண்டல மீனவ மக்கள் மற்றும் 8 ஊர் பங்குதந்தைகள் சேர்ந்து முள்வேலியை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக 8 பங்கு தந்தைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்தநிலையில் முள்வேலியை அகற்றுவதில் தலைமை ஏற்று வழி நடத்திய சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து 8 பங்குதந்தைகள் மற்றும் மீனவ பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு வந்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இறுதியில் கைதானவரை போலீசார் ஜாமீனில் விட்டனர். அதைத்தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை 11 மணி நேரம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

520 பேர் மீது வழக்கு

அதை தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் நித்திரவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு முடக்கி அரசு வேலைகளை செய்ய விடாமல் தடுத்ததற்காக தூத்தூர் மண்டல பங்கு தந்தையர்களான ஷாபின், ஜிபு, சுரேஷ் பயஸ், கிளீட்டஸ், ரெஜீஷ்பாபு, அஜீஷ் ஜான், பென்சிகர், ரிச்சர்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 520 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்