வளையபட்டியில் போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
வளையபட்டியில் போலீஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மோகனூர்
போலீஸ் நிலையம்
நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை வளையபட்டி வழியாக செல்கிறது. இதில் என்.புதுப்பட்டியில் இருந்து வளையபட்டி வரை 4 கி.மீட்டர் தூரம் மோகனூர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டிலும், வளையபட்டி கருவாட்டு ஆறு அருகில் இருந்து திருச்சி மாவட்டம் மேய்க்கல்நாயக்கன்பட்டி எல்லை வரை உள்ள 4 கி.மீட்டர் தூரம் எருமப்பட்டி போலீஸ் நிலைய கட்டுப்பாட்டிலும் உள்ளது.
வளையபட்டியில் இருந்து மோகனூர் 14 கி.மீட்டர் தூரத்திலும், என்.புதுப்பட்டியில் இருந்து மோகனூர் 18 கி.மீட்டர் தூரத்திலும் உள்ளன. அதேபோல் மேய்க்கல்நாயக்கன்பட்டி எல்லையில் இருந்து எருமப்பட்டி 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.
குடும்ப தகராறு, நிலத்தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு போலீசில் புகார் செய்ய ஏ.வாழவந்தி, மேட்டுப்பட்டி, திப்ரமகாதேவி, ஜம்புமடை போன்ற பகுதிகளிலிருந்து எருமப்பட்டி செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பாமர மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்வதில் பெரிய சிரமம் ஏற்படுகிறது. அதேபோல், வளையபட்டியில் இருந்து மோகனூர் செல்வதற்கும் போதிய பஸ் வசதி இல்லை. எனவே மோகனூர் மற்றும் எருமப்பட்டி ஆகியவற்றிற்கு பொதுவான இடமாக அமைந்துள்ள வளையபட்டியில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து வளையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி சண்முகம் கூறியதாவது:-
நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்ல முக்கிய சாலையாக வளையபட்டி சாலை உள்ளது. வளையபட்டி பகுதியில் ஏதாவது சாலை விபத்து மற்றும் பிரச்சினை ஏற்பட்டால், மோகனூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தான் போலீசார் வரவேண்டும். 14 கி.மீட்டர் தூரம் உள்ள மோகனூரில் இருந்து போலீசார் வருவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும். குறிப்பாக சாலை விபத்து ஏற்படும் காலங்களில் போலீசார் வந்து தான் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். அந்த சூழ்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மோகனூர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்ய, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகின்றது. ஆதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் வளையபட்டி பஸ் நிறுத்தம் அருகில் இருந்து காட்டுப்புத்தூர் சாலை பிரிகின்றது. அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக வந்து, பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்கும் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
பஸ் நிலையம் வேண்டும்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார்:-
நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 4 கி.மீட்டர் தூரம் மோகனூர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டிலும், 4 கி.மீட்டர் தூரம் எருமப்பட்டி போலீஸ் நிலை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும்போது மோகனூர் போலீசாரோ, எருமப்பட்டி போலீசாரோ வருவதற்கு குறைந்தது 30 நிமிடம் ஆகின்றது. அந்த நேரங்களில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் அவசர தேவைக்காக பொதுமக்கள் செல்வது காலதாமதம் ஆகின்றது. வளையபட்டியில் போலீஸ் நிலையம் இருந்தால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விரைவாக போக்குவரத்தை சீர் செய்ய முடியும், அதேபோல் எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள், பின்புறம் இருந்து வரும் வாகனங்கள், காட்டுப்புத்தூர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஒன்று சேரும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு பஸ் நிலையம் அமைத்து, பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்று பயணிகளை இறக்கி விட்டால் விபத்துகளை தவிர்க்கலாம்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் பிரபாகரன்:-
பெங்களூரு, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து நாமக்கல் வழியாக வரும் பஸ்கள் வளையபட்டி வழியாகத்தான் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் மோகனூர் மற்றும் எருமப்பட்டி போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆகின்றது. எனவே வளையபட்டி பகுதியில் போலீஸ் நிலையம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.