கோவை சம்பவத்தில் காவல்துறை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரத்தில் காவல்துறை சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-24 11:14 GMT

சென்னை,

கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரத்தில் காவல்துறை சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

"23.10.2022 அன்று காலை கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில்,சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

காவல்துறை தலைவர் நேற்றைய பேட்டியின்போது, சம்பவ இடத்தை தடய அறிவியல்துறை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு பிரிவினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும், காரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சிலிண்டர் வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் பேட்டியளித்துள்ளார். இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்றும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும், அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

"கோவையில் கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்கவைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது" என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள்,கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போன்றவை சிதறிக் கிடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையிலேயே மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. இறந்த முபின் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்று தெரியவில்லை என பேட்டியின்போது காவல்துறை தலைவர் கூறியுள்ளார். அனைத்து நிலைகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போதும், தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சி செய்த போதும் அமைதியான மாநிலமாக காட்சியளித்த தமிழ்நாட்டில், எப்போதெல்லாம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம், குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது.தொடர்கதையாகவும் உள்ளது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியின் முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்? உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் நிர்வாகத் திறமையற்ற, தவறு செய்பவர்களை கண்டிக்கும் சட்டப்படியான அதிகாரத்தை காவல்துறைக்குத் தராமல், காவல்துறையை தங்களுடைய பொய்யான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகபயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஏவல்துறையாக, இந்த அரசு நடத்துவதே, இப்படிப்பட்ட உளவுத்துறை மற்றும் காவல்துறையின் வீழ்ச்சிக்குக் காரணம்.

நான் பலமுறை எனது அறிக்கைகளின் வாயிலாகவும், பேட்டிகளின்போதும் அம்மாவின் அரசு எப்படி காவல்துறையை சட்டப்படி, நேர்மையாக செயலாற்ற அனுமதித்ததோ, அப்படி இந்த அரசும் காவல்துறையை சுதந்திரமாக, சட்டத்தின்படிசெயலாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால், நிர்வாகத் திறமையற்ற இந்த அரசு, பொய்யான காரணங்களுக்காக எதிர்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்துகிறதே தவிர, காவல்துறையை முழு சுதந்திரத்துடன், சட்டப்படி நேர்மையாக பணியாற்ற அனுமதிப்பதில்லை.

எனவே, இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? என்றும், அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாமல் சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளையும், பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடிக்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்