விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-19 18:45 GMT

விழுப்புரம் ரங்கநாதன் சாலை கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் முருகேசன் (வயது 43). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16-ந்தேதியன்று அதிகாலை 5 மணியளவில், இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தங்கையின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் விழுப்புரம் வந்தார்.

நகை- பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு முருகேசன் திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த அலமாறி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், ¼ கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளைபோன நகை, பணம், வெள்ளிப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்