கடன் வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் மோசடி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கடன் வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-30 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் பனங்குப்பத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24), என்ஜினீயர். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 1 சதவீத வட்டியில் தனிநபர் கடன் வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குறுந்தகவலில் இருந்த செல்போன் எண்ணை பாலாஜி தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்களுடைய ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பான் கார்டு உள்ளிட்ட நகலை அனுப்பி வைக்குமாறு கூறினார். அதனை பாலாஜியும் அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அந்த நபர், ரூ.2 லட்சத்துக்கு கடன் தருவதாக கூறியதோடு, அதற்காக விண்ணப்ப கட்டணம், ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட கட்டணங்கள் கேட்டார்.

பணம் மோசடி

இதை உண்மையென நம்பிய பாலாஜி, 11 தவணைகளாக அவர்கள் கேட்டவாறு ரூ.1,19,435-ஐ அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பாலாஜிக்கு கடன் ஏதும் வழங்கப்படவில்லை. மேலும் அவர், அந்த நபர்களை தொடர்புகொண்டு கேட்டபோது வரைவோலை கட்டணம், கமிஷன் என்று மேலும் பணத்தை கேட்டு இழுத்தடித்தார்கள். அதன் பிறகுதான் அவர்கள், கடன் தருவதாக கூறி பாலாஜியிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்