வேலூர் பாலாற்றில் தலை, உடலை தேடிய போலீசார்

வாலிபர் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலால் வேலூர் பாலாற்றில் தலை, உடலை போலீசார் தேடினர்.

Update: 2023-02-06 17:02 GMT

காட்பாடியை அடுத்த லத்தேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் வேலூரில் கொலை செய்யப்பட்டு பாலாற்றில் உடல் வீசப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் தலையை வெட்டி தனியாக வீசியதாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து காட்பாடி, விருதம்பட்டு மற்றும் தனிப்படை போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே விருதம்பட்டு பாலாற்று பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சுடுகாடு, பாலாறு பாலங்களின் 4 பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் இறங்கியும் ஆற்றில் உள்ள செடி, கொடி, புதர்கள் மண்டி கிடந்த பகுதிகளிலும் உடல் ஏதேனும் கிடக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் அங்கு சென்று சுடுகாடு மற்றும் பாலாற்று பகுதியில் விசாரணை மேற்கொண்டார். பாலாற்றில் ஏராளமான போலீசார் உடலை தேடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களும், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு வேடிக்கை பார்த்தவர்களை விரட்டி அடித்தனர்.

தேடுதல் முடிவில் அங்கு தலையோ, உடலோ எதுவும் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் போலீசார் தேடும் பணியை கைவிட்டனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தேடுதல் பணி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்