கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசார் ஒத்திகை

கடலூரில் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசார் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-27 17:57 GMT

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றால், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்கும் நிகழ்ச்சி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் முன்னிலையில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது போலீசார் 2 குழுக்களாக பிரிந்தனர். இதில் ஒரு குழுவினர் கலவரக்காரர்கள் போன்றும், மற்றொரு குழுவினர் போலீஸ் சீருடையில் லத்தியுடன் வந்தனர். பின்னர் அவர்கள், கலவரக்காரர்களை பார்த்து ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடியிருப்பது சட்டவிரோதமானது. அதனால் அனைவரும் உடனே கலைந்து செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு

ஆனால் கலவரக்காரர்களாக இருக்கும் போலீசார் கலைந்து செல்லாமல், வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்கின்றனர். அவர்கள் சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் மோதலில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீசார் அவர்களை நோக்கி கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனமான வருண் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர். பின்னர் கலக கூட்டத்தினர் மீது போலி குண்டுகள் மூலம் துப்பாக்கி சூடு நடத்தி கலைத்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், போலீசாரின் ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டு, அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்