மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மீட்பு பணியில் ஈடுபட உபகரணங்களுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்

Update: 2022-11-02 18:45 GMT

விழுப்புரம்

பருவமழை முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு உபகரணங்களுடன் தயார்

இவர்கள் அனைவரும் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்