ஜமேஷா முபினின் நண்பர் வீட்டில் போலீசார் சோதனை
கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் நண்பர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
உக்கடம்
கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் நண்பர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
கார் வெடிப்பு
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமஷோ முபின் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் கோவையின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விற்கு மாற்றப்பட்டது. இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் கோவை மாநகர போலீசார் ஜமேஷா முபினுடன் நட்பில் இருந்தவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
நண்பர் வீட்டில் சோதனை
போலீஸ் விசாரணையில் தெற்கு உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த முகமது ஹசன் (வயது 29) உள்பட 3 பேர் அவருடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்துள்ளதாக தெரியவந்தது.
இந்த நிலையில் கோவை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் போலீசார் நேற்று காலை முகமது ஹசன் வீட்டில் சோதனை நடத்தினர். சில மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் போலீசார் ஆவணங்கள் எதையும் கைப்பற்றவில்லை.
இதையடுத்து ஜமேஷா முபினின் நண்பர்கள் 2 பேரின் வீட்டில் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் இருவரின் வீட்டு முகவரியை காணும் பணியில் கோவை மாநகர போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.