பொம்மன், பெள்ளி தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு
பொம்மன், பெள்ளி தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு
கூடலூர்
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படம் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பரமாரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது.
கிருஷ்ணகிரியில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பை பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை ஒப்படைத்தது. இந்த குட்டி யானைகளை தங்களது பிள்ளைகள் போல வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான் ஆஸ்கார் விருது வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவண படம் எடுக்கப்பட்டது. இந்த தம்பதியை சந்திக்க நாளை(ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகிறார். இதனால் பொம்மன், பெள்ளி தம்பதிக்கும், அவர்களது வீட்டிற்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொம்மன், பெள்ளி தம்பதியை காண வருகிற அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.