பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் ரோந்து
பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க 35 வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க 35 வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 ரவுடிகள் கைது
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எவ்வித குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 22 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த வேண்டி கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து நன்னடத்தைக்கான பிணை ஆவணம் பெறப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கு 24 மணி நேரமும் கழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஜார் வீதிகள், கோவில்கள், சுற்றுலா தளங்கள் ஆகிய இடங்களில் திருட்டு நடைபெறுவதை தடுக்க போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
35 வாகனங்களில் போலீசார் ரோந்து
பொங்கல் பண்டிகை நாட்களில் சாலை விபத்துகளை குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நிகழும் 15 இடங்களை அடையாளம் கண்டு அங்கு வாகன சோதனையில் ஈடுபடவும், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கு நெடுஞ்சாலைகளில் தனித்தனியே குறிப்பிட்ட தூரம் ஒதுக்கப்பட்டு அதில் ரோந்து சென்று கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 35 வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்