கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் நேற்று காலை கோமுகி ஆற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ராஜேந்திரனை தேடி கோமுகி ஆற்றுக்கு சென்றனர். அப்போது ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் ராஜேந்திரனின் துணி மட்டும் இருந்தது. ஆனால் அவரை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஆற்றில் இறங்கி தேடி பார்த்தபோது ஆற்றின் கரையோரம் முள்செடி ஓரத்தில் ராஜேந்திரனின் உடல் மிதந்தது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீரில் மூழ்கி ராஜேந்திரன் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.