கைதான 5 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கைதான 5 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சி.பி.சி.ஐ.டி. மனு மீது மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-15 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 8-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து, ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதுகுறித்த விசாரணைக்காக நேற்று காலை மேற்கண்ட 5 பேரும் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத், 3 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து ெசல்லப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்