சத்திரப்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்; டி.ஐ.ஜி. நடவடிக்கை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக சத்திரப்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடைநீக்கம் செய்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-26 17:13 GMT

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக சத்திரப்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடைநீக்கம் செய்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

கொலை வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் ஓமந்தூரான் (வயது 45). இவர் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஓமந்தூரான் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது அவரது 16 வயது மகன், தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் சரணடைந்தார். இதுதொடர்பாக சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது தாய்-தங்கையை துன்புறுத்தியதால் ஓமந்தூரானை அவரது மகனே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகளுக்கு ஆதரவு

இதற்கிடையே ஓமந்தூரான் கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இன்ஸ்பெக்டர் செயல்படுவதாகவும் ஓமந்தூரானின் தந்தை ரங்கசாமி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. மற்றும் தென்மண்டல ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். இதையடுத்து கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மாற்றப்பட்டார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தீவிர விசாரணை நடத்தினார். அதில், ஓமந்தூரானை அவரது மனைவி பாண்டீஸ்வரி, உறவினர்களான தாசரிப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி (55), மதுரையை சேர்ந்த ராமையா (62), அவரது மனைவி லட்சுமி (50) ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்ததும், அதன்பிறகு ஓமந்தூரானின் மகனை போலீசில் சரணடைய செய்ததும் தெரியவந்தது. பின்னர் பாண்டீஸ்வரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணியிடை நீக்கம்

மேலும் இந்த வழக்கில் உண்மை நிலவரம் தெரிந்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா, கொலையில் சிறுவனை சிக்க வைக்க முயற்சி செய்ததும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதும் தெரியவந்தது. பின்னர் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் கவிதா அனுப்பினார்.

இதையடுத்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க், கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபாவை பணியிடைநீக்கம் செய்ய திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா இன்று சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்