போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.;
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாடும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில் பொதுமக்கள் அச்சமின்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மாநகர போலீசார் சார்பில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கொடி அணிவகுப்பு
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பெரிய கடைவீதி, மலைவாசல் வழியாக சிந்தாமணி அண்ணாசிலை வரை ஊர்வலமாக சென்றனர்.
இதில் துணை கமிஷனர்கள் அன்பு, சுரேஷ்குமார், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அதிரடிப்படையினர், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்களும் கொடி அணிவகுப்பில் இடம் பெற்று இருந்தன.
கேமரா பொருத்தி கண்காணிப்பு
அணிவகுப்பு முடிவில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறும்போது, விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை பதற்றம் இன்றி நடத்தும் வகையில் இன்று (நேற்று) கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதே போல் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்படும். விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.