தஞ்சை மாவட்டத்தில் 9,761 பேர் போலீஸ் எழுத்துத்தேர்வு எழுதினர்

தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த போலீஸ் எழுத்துத்தேர்வை 9 ஆயிரத்து 761 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 456 பேர் தேர்வு எழுத வரவில்லை

Update: 2022-11-27 19:30 GMT

தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த போலீஸ் எழுத்துத்தேர்வை 9 ஆயிரத்து 761 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 456 பேர் தேர்வு எழுத வரவில்லை.

போலீஸ் எழுத்துத்தேர்வு

தமிழக போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 552 பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வல்லம் பிரிஸ்ட் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சை அருண்நகர் அடைக்கலமாதா கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குந்தவைநாச்சியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடந்த எழுத்துத்தேர்வில் பங்கேற்க 12 ஆயிரத்து 217 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

9,761 பேர் எழுதினர்

இவர்களில் 9 ஆயிரத்து 761 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். பல்வேறு காரணங்களால் 2 ஆயிரத்து 456 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. ஆனால் காலை 8.30 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் ஆண்களும், பெண்களும் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம், துண்டு, பேக் உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த பொருட்களை எல்லாம் வைப்பதற்காக தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. முழுக்கை சட்டை அணிந்து, மடித்து வைத்து வந்தவர்களிடம் அந்த மடிப்பை எடுத்துவிடச் சொல்லி போலீசார் சோதனை நடத்தினர். சில மையங்களில் முகக்கவசத்தை கூட கழற்றிவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அடையாள அட்டை

கர்ப்பிணிகளும் தேர்வு எழுத வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடன் பலர் தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்கள் குழந்தைகளை தங்களது தாய், மாமியார், கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். மேலும் அடையாள அட்டை, அனுமதி கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை இல்லாதவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. தேர்வு எழுதுபவர்கள் மையங்களுக்கு வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழ்மொழி தகுதித்தேர்வு 80 வினாக்களையும், முதன்மை எழுத்துத்தேர்வு 70 வினாக்களையும் கொண்டதாக இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது தான் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித்தேர்வு நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்